செயற்கை தொழில்நுட்பத்தினால் மனிதனின் மாண்புகள் எந்த அளவிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

Published Date: October 23, 2025

CATEGORY: EVENTS & CONFERENCES

 கல்வி என்பது மனிதனை பணிக்கான நபராக உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், மனிதாபிமானமிக்க சக மனிதர்களிடத்தில் இணக்கம் காட்டுகின்ற நபராக இருக்கக்கூடிய சகிப்புத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை சார்பில் 'சமூக ஜனநாயக கையேடு' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், தகவல் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு நூலினை வெளியிட்டார்.

நூலின் முதல் பிரதியை உலகத் தமிழ்ச்சங்க இயக்குனர் முனைவர் பர்வீன் சுல்தானா பெற்றுக்கொண்டார். மேலும் இந்த விழாவில் எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், '' நான் வாழ்நாள் முழுவதும் ஒரு மாணவனாக என்னை கருதுகிறேன் என்று பல இடங்களில் கூறி இருக்கிறேன். சில நல்ல வாய்ப்புகள் பெற்றவன். பல நாடுகளில் பல பல்கலைக்கழகங்களில் பல பட்டங்கள் பெற்றவன்.

தமிழ் மொழியில் யாதும் ஊரே யாவரும் கேளிர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை தாண்டி, திருக்குறளில் நான் பெரிதும் நேசிக்கின்ற குறளாக 'தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்'.

தந்தையின் மிகப்பெரிய கடமை தனது மகனை கற்றவர் கூட்டத்தில் கல்வியில் சிறந்தவராக முன் இருக்கச் செய்ய வேண்டும், அந்த வகையில் நான் அத்தகைய வரத்தை பெற்றவன். 1921ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் ஆட்சி காலத்திலிருந்து கல்வி என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் சரிசமமாக அளிக்கும் உரிமையை பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல் வெகு சிலருக்கு மட்டுமே இருந்த கல்வி வாய்ப்பு பலருக்கும் ஆக மாற்றப்பட்டது. தொடர்ந்து நீதி கட்சி தொடங்கி ஆட்சி பொறுப்பேற்ற அனைவரும் கல்விக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்ட காரணத்தினால் உயர்கல்விக்கான திறன் தமிழ்நாட்டில் அதிகரித்து இருக்கிறது.

அதே நேரத்தில் கல்வி என்பது மனிதனை பணிக்கான நபராக உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், மனிதாபிமானமிக்க சக மனிதர்களிடத்தில் இணக்கம் காட்டுகின்ற நபராக இருக்கக்கூடிய சகிப்புத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். அதற்கு இதுபோன்ற கையேடுகள் நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.  இதனை அனைத்து மாணவர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய ஒரு நிலையை உருவாக்க வேண்டும்.

இன்றைக்கு செயற்கை தொழில்நுட்பத்தில் (AI) கணினியே அதனுடைய ப்ரோக்ராமை உருவாக்கக்கூடிய நிலைமை இருக்கிறது. இதனால் மனிதனின் மாண்புகள் எந்த அளவிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதை நாம் உணர்ந்து நமது கல்விக் கொள்கையில் மனிதனுக்கான விழுமியங்களும் இடம்பெற வேண்டும். மத்திய அரசின் கல்விக் கொள்கை நமக்கு ஏற்புடையது அல்ல, அதைப் பற்றி நான் பேசவும் விரும்பவில்லை. எனவே நமது கல்விக் கொள்கையில் இத்தகைய விழுமியங்களை மட்டும் இடம்பெறச் செய்ய வேண்டும். அதற்காக அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும். அதற்கான முயற்சியாக இந்த நிகழ்ச்சி நிச்சயம் இருக்கும்.'' என தெரிவித்தார்.

Media: TAMIL.SAMAYAM.COM